Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உலகின் அதிகார சமநிலை மாறிவிட்டது.


தோழமை மிக்க உறவுகளே. அமைதியான மனநிலையில் இதை எழுதுகிறேன். 

சுமாராக எனது 11 வயதிலிருந்து போரின் காயங்களைக் கண்ணுற்று வளர்ந்து வந்திருக்கிறேன். 

1984 இல் எங்கள் ஊரிலிருந்து வயலுக்குப் போனோர் கடத்தப்பட்டார்கள். அவர்கள் திரும்பி வரவேயில்லை. 

அதேபோல சுடப்பட்டு மின் கம்பங்களில் கட்டி வைக்கப்பட்ட சடலங்களை, ஒரு சிறுவனாக நேரில் போய் பார்
போர் பற்றிய மனப்பதிவு எனக்குள் இப்படித்தான் தொடங்குகிறது. எங்கள் ஊர் சந்தை எரிக்கப்பட்டது. 

மீன் மார்க்கெட்டில் நடந்த குண்டுவெடிப்பும் அதில் கொல்லப்பட்டோரும் கண் முன்னே நிற்கின்றனர். அதில் ஒருவர் அடிக்கடி நான் எதிர்கொள்ளும் முதியவர். அமைதியான சுபாவம் கொண்டவர். ஒரு பாவமும் அறியாத மனிதர்.

இதன் பிறகு அடிக்கடி துப்பாக்கிச் சூடுகள், படுகொலைகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். சில படுகொலைகளை நேரில் பார்க்க நேர்ந்தது. எங்கும் இரத்த வாசம்.

பள்ளிவாசல் படுகொலைகள்... வயல்வெளி படுகொலைகள்..
இப்படி எங்களது இளமைக் காலம் முழுக்க போரின் நிழலிலேயே கழிந்தது.

எங்களோடு பேசிவிட்டுச் சென்ற அலி உதுமான் சேர் கண் முன்னே சுட்டுக்கொல்லப்பட்டார். 

அவரைக் கொல்ல நீட்டப்பட்ட துப்பாக்கிதாரி இன்னமும் என் கண் முன்னே தெரிகிறான்.

நெருப்பை மூட்டி டயரில்...
நேரில் கண்ட இந்த சம்பவத்தை நான் விபரித்து எழுத விரும்பவில்லை.

போருக்கு இனம் இல்லை. மொழி இல்லை.
இலங்கையின் நான்கு திசைகளிலும், உள்நாட்டுப் போர் தன் பேரழிவுகளைப் பதிவு செய்துள்ளது.

நாங்கள் போரின் தலைமுறையினராகவே வளர்ந்தோம். 

சமூக உறவுகள் சிதைந்து சிதிலமாகி, கல்வியும் பொருளாதாரமும் உட்கட்டமைப்பும் சிதைந்த ஒரு நாடே எங்களுக்கு மிஞ்சியது.

போர் உருவாக்கிய பெண் தலைமைக் குடும்பங்கள் படும் பாட்டை யாரிடம் சொல்லி அழுவது?

அநியாயமாகத் திணிக்கப்படும் போர் ஒரு பெரும் அநீதி. அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

ஆனாலும், போர் என்ன காரணங்களுக்கு நடந்தாலும், அதிலிருந்து மீள்வதே வழி. 

எல்லா மோதல்களும் பேச்சுவார்த்தை மேசைகளுக்கு வந்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.

போரின் இழப்புகள் போலவே. சமாதானமும் சில இழப்புகளைக் கொண்டுவரத்தான் செய்யும். 

எல்லோருக்கும் திருப்தி தரும் தீர்வு ஒன்றைக் கண்டடைவது கடினம்.

ஆனாலும், வளைகுடாவில் இப்போது நடந்திருப்பது நல்லது என்பதே என் கணிப்பு. 3ஆவது உலகப் போரிற்கு யாரும் தயாரில்லை. பேரழிவுக்கு அனாவசியமாக விலை பேசத் தேவையில்லை. 

எந்த முட்டாளாவது அணுவாயுதங்களைப் பாவித்தால், அதன் வலியும் பேரழிவும் கற்பனை செய்ய முடியாத அளவு மிக அபாயகரமானதாக இருக்கும்.
அது தேவையில்லாத ஆணி.

டிரம்பும் நெதன்யாஹுவும் தொடுத்த அநீதியான யுத்தம் இது. ஈற்றில் அவர்கள் தங்களது தலையில் மண்ணை அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள். 

இஸ்ரேலின் தேவைக்காக பிராந்தியத்தையே கொளுத்த வெளிக்கிட்ட கயமைத்தனம் இது. அகண்ட இஸ்ரேல் கனவு கொண்டுவந்த வெறியின் வெளிப்பாடு. ஆனால், அது தோல்வியில் முடிந்திருக்கிறது.

ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியும் இரத்தக் கறைகளோடுதான் தங்கள் ஆட்சிக் கதிரைகளில் இருந்து வருகிறார்கள். உலக மக்களை இடம்பெயர்ந்து அலைய வைத்திருக்கிறார்கள். 

அப்பாவிகளின் உயிரைக் குடிக்கும் இந்த கட்டற்ற அதிகாரம் ஒரு நாள் முடிவுக்கு வரும்.
அதற்கான முன்னுரையே இந்த யுத்தம். அதுதான் கொஞ்சம் ஆறுதல் தருகிறது.

இந்தப் போர் தொடங்கி சில நாட்களிலேயே, உலகின் அதிகார சமநிலை மாறி விட்டது. புதிதாக யாரும் வெற்றி தோல்வி பற்றி பாடம் எடுக்கத் தேவையில்லை.

போரை வலிந்து தொடங்கியவர்கள், அதை முடிக்க வழி தெரியாமல் தவித்ததை முழு உலகமும் கண்டு ரசித்தது. விழுந்தும் மீசையில் மண் படவில்லை கதைதான் இது என்பதை எல்லோருமே அறிவர்.

அதனால்தான் டிரம்ப் திரும்பத் திரும்ப பிதற்றிக் கொண்டிருந்தார். சென்ற இரவு கூட, ஏடாகூடமாக எதுவும் நடந்துவிடுமோ என்ற அச்சம் இருக்கவே செய்தது.

இதுவும் வெறும் வாய் வீச்சுதான் என்று மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. இயலாதவன் அரற்றுவான்தான். அதற்காக சும்மா கைகட்டி நின்று புதினம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவன் முட்டாளாக- மனப் பிறழ்வு கொண்டவனாக இருப்பதுதான் ஆகப் பெரிய பிரச்சினை.

முன்னெப்போதை விடவும் இந்த முறை, உலகளாவிய வெகுசன அபிப்பிராயம் போருக்கு எதிராகவே இருந்தது. அமெரிக்காவிற்கு உள்ளேயே அது கடுமையாக வெளிப்பட்டது.

டிரம்பின் அமெரிக்கா, கோர்பச்சேவ் கால சோவியத் யூனியனை நினைவூட்டுகிறது. இந்த ஆள் வீழ்ச்சியின் கதையை எழுதவே வந்துள்ளார். 

எல்லாக் காலமும் ஒன்றல்ல. ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம் என்பார்கள். இப்போது கால சூழல் மாறிவிட்டது.

எப்போதும் இராஜதந்திர நகர்வுகள், லொபி பண்ணுவது முக்கியம். பாகிஸ்தான் முன்னெடுக்கும் நகர்வுகள் கவனத்திற்குரியவை. அந்நாடு சீனாவோடும் சவூதியோடும் நெருக்கமாக உறவாடுகிறது. அத்தோடு அமெரிக்காவோடும் அணுக்கமாக உள்ளது. ஈரானோடும் அயலுறவைப் பேணி வருகிறது.
இது கவனத்திற்குரியது.

புவிசார் அரசியல் வழித்தடத்தில், இது மூலோபாய ரீதியில் மிக முக்கியமான முன்னெடுப்பு. பதிலாள் போர் போலவே பதிலாள் இராஜதந்திரமும் (Proxy Diplomacy) இன்றைய உலகின் அரசியல் பாஷைதான்.

இந்திய வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானை தரகர் நாடு என்று கிண்டலடித்தார். அது உள்ளூர் அரசியலின் பொருமலேயன்றி வேறொன்றும் அல்ல. தன்னால் இயலாததை தன் எதிரி செய்வது பற்றிய எதிர்வினை. 

உண்மையில் இந்தியாவே இதை முன்னின்று செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு கொடுப்பினை இல்லை. அவர்களது அரசியல் தெரிவு இதற்கு வழிவிடாது.

உண்மையில் இணக்க முயற்சிகளை யார் முன்னெடுத்தாலும் அதை வரவேற்க வேண்டும். தென்னாசிய நாடொன்று உலகளாவிய ராஜதந்திர அசைவில் பெரும் பங்கெடுத்திருக்கிறது. அதை வரவேற்க வேண்டும்.

தென்னாசியா என்பது உலக சனத்தொகையில் சுமாராக 25% உள்ள பிரதேசம். அந்த வகையில் உலகளாவிய மனித வளத்தின்  மையம். அதிகம் வயதானோர் நிறைந்த இன்றைய உலகில், இளைஞர் யுவதியர் நிறைந்த பிராந்தியம் இது.

தென்னாசியர்கள் பலர், மத்திய கிழக்கில் மையம் கொண்டுள்ளார்கள். நமது பொருளாதாரம் மத்திய கிழக்கில் பெரிதும் தங்கியிருக்கிறது.
அந்த வகையில் உலக சமாதானத்திற்கான இந்த முன்னெடுப்பை- பங்களிப்பை நாம் மனதார வரவேற்க வேண்டும்.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உலகின் அதிகார சமநிலை மாறிவிட்டது. 

பேச்சுவார்த்தை மேசையில் ஈரானின் கை ஓங்கியே இருக்கப் போகிறது.
இது உலக அரசியலில் ஒரு திருப்புமுனையாக இருக்கப் போவதை தெளிவாக ஊகிக்க முடிகிறது.

மாற்றம் ஒன்றே மாறாதது. 21 ஆம் நூற்றாண்டின் 2 ஆம் கால் நூற்றாண்டு புதிய செய்திகளோடு நகர்கிறது.

இது நல்ல விளைவுகளைக் கொண்டுவர வேண்டும்.
இதற்காகப் பேசுவதும் எழுதுவதும் செயற்படுவதும் முக்கியம். 

நன்றி 

சிராஜ் மஷ்ஹூர்
08.04.2026

படம்: தென் லெபனானில் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள். 
நன்றி: அல் ஜஸீரா.
யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உலகின் அதிகார சமநிலை மாறிவிட்டது. Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 08, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.