Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஆயிரம் ரூபா சம்பள அரசியல்: யார் யாரை ஏமாற்றப் போகிறார்கள்? கூட்டு ஒப்பந்தத்தின் நிலை என்ன? மலையகத்திலிருந்து வழித்தடத்திற்காக.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கை தொடர்பில் பெரிதாக அறிமுகக் குறிப்புத் தேவையில்லை. அதனைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் எனும் ஒட்டுமொத்த சமூகங்களின் குரல் கடந்த காலங்களில் ஒலித்து வந்துள்ளது. எனினும், இந்தக் குரலுக்கு செவி சாய்க்காத இரண்டு தரப்புகள் உள்ளன. ஒன்று கம்பனிகள், இரண்டாவது அரசாங்கம்.

இது வெறுமனே செய்தி அறிவிப்பினூடாக சாத்தியப்படுத்த முடியுமான எளிமையான பிரச்சினை அல்ல.

பெருந்தோட்டம் சிறுதோட்டம் என பிரிக்கப்பட்டுள்ள இலங்கையின் ஏற்றுமதிப் பயிர் உற்பத்திகளில் பிரதான இடம்பிடிக்கும் தேயிலை சிங்கள மக்களிடையே சிறுதோட்ட உடமையாகவும் ( மக்களே தோட்ட உரிமையாளர்கள்), தமிழ் மக்களிடையே பெருந்தோட்டமாகவும் ( கம்பனிகளே உரிமையாளர்கள். தொழிலாளர்கள் நாட்கூலி பெறுவோர்) அமைவதற்கான அரசியல் பின்னணி நீண்ட நெடிய சித்தாந்தத்துடன் தொடர்புடையது. 

இந்தப் பெருந்தோட்டக் கம்பனிகளிடம் அந்த நாட்கூலியைப் பெற்றுக் கொள்ள அந்த தோட்டத் தொழிலாளர்களின் தொழிற் சங்கங்கள் சிலவும் ( அதிக அங்கத்தவர் கொண்ட ) கம்பனிகளும் கூட்டு ஒப்பந்தம் எனும் நடைமுறையை கடந்த கால்நூற்றாண்டு காலமாக பின்பற்றிவருகின்ற நிலையில், அரசாங்கத்தால் இதில் பாரிய தலையீட்டைச் செய்யமுடியாத நிலை இருந்தது; இன்னும் இருக்கிறது. 

இந்த நிலையில் கடந்த இரண்டு வருட காலமாக பெரும் பேசுபொருளான 1000/= அடிப்படைச் சம்பளக் கோரிக்கை தொடர்பில், தொழில் அமைச்சர்களாக இருந்த ஜோன் செனவிரத்ன ( சு.க), ரவீந்திர சமரவீர ( ஐ.தே.க ) இருவருமே அரசாங்கத்தின் இயலாமையையே வெளிப்படுத்தி இருந்தனர். கம்பனிகளைப் பொறுப்பாகக் கொண்ட பெருந்தோட்டத்துறை அமைச்சராக இருந்த நவீன் திசாநாயக்க  ஆயிரம் ரூபா சம்பளம் கொடுத்தால் கம்பனிகள் கவிழ்ந்துவிடும் என வாதாடியதுடன், அரசாங்கம் 50/= நாளாந்த உதவு தொகை கொடுத்தால் 'தான் அமைச்சுப் பதவியைத் துறப்பேன்' என்ற நிலை வரைச் சென்று தனது எதிர்ப்பினை வெளியிட்டார்.

இந்த நிலையிலேயே கூட்டு ஒப்பந்தம் எனும் இருபத்தைந்து வருடகால நடைமுறையும் அதே கம்பனிகளும் தொழிற்சங்கங்களும் அப்படியே உள்ள நிலையில், 'தை பிறந்தால் வழிபிறக்கும்' எனக் கூறி தைப் பொங்கல் தினத்தன்று இனிப்பாக 'செய்தி' சொல்லப்பட்டிருக்கிறது. இதுவும் ஒரு அரசியல் விளையாட்டாகவே தெரிகிறது. 

இப்படி இலகுவாக கம்பனிகள் சம்மதித்து, அரசாங்கம் தலையீடு செய்ய முடியுமெனில் கடந்த இருபத்தைந்து  ஆண்டுகாலம் முழுவதும் இந்த மக்கள் இரண்டு தரப்பால் மட்டுமல்ல, தொழிற்சங்க தரப்பாலும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவு. இப்போது கூட ஆயிரம் ரூபா ஆரவாரம் செய்யும் யாரும், 'அப்போ பெருமெடுப்பில் செய்யப்படும் கூட்டு ஒப்பந்தத்தின் நிலை என்ன' என்பது பற்றி கேள்வி எழுப்புவதாக இல்லை. 

பொருளாதார நலன்களும் அரசியல் நலன்களும் ஒன்றோடொன்று மோதும் இந்த ஆட்டத்தின் முடிவு சாதகமாக அமையும் என்று கணிக்க முடியாத களநிலவரமே காணப்படுகிறது.
நடைமுறையில் 1000/= அடிப்படைச் சம்பளம் வழங்கப்படுமா என்பது இன்னும் சந்தேகத்திற்குரிய ஒரு விடயமே. இதன் பெயரில் யார் யாரை ஏமாற்றப் போகிறார்கள் என்பது நன்கு தெளிவானது. பொறுத்திருந்து பார்ப்போம்.

குறிப்பு: இது 'வழித்தடம்' முகநூல் இதழில்  பதிவேற்றப்பட்டது.
ஆயிரம் ரூபா சம்பள அரசியல்: யார் யாரை ஏமாற்றப் போகிறார்கள்? கூட்டு ஒப்பந்தத்தின் நிலை என்ன? மலையகத்திலிருந்து வழித்தடத்திற்காக. Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 16, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.