Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் ஈகைத் திருநாள் ஈதுல் பித்ர்

பெருநாட்கள் அல்லது பண்டிகைகள் அரபி மொழியில் 'ஈத்' என அழைக்கப்படுகின்றது. ஈத் என்றால் மீண்டும் மீண்டும் வருதல் என்ற கருத்தை கொடுக்கின்றது. 

ஆண்டுதோறும் வருவதால் பெருநாட்களுக்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது. இஸ்லாத்தில் ஆண்டுதோறும் இரண்டு பெருநாட்கள் மாத்திரமே உள்ளன. அவை தவிர ஒவ்வோர் வார இறுதியிலும் வெள்ளிக்கிழமை நாள் முஸ்லிம்களுக்கு பெருநாளாக கருதப்படுகிறது. இதுதவிர வேறு எவ்விதமான கொண்டாட்டங்களும் இஸ்லாத்தில் கிடையாது.

இறைவன் மிக உன்னதமான நோக்கின் அடிப்படையில் இரு பெருநாட்களையும் அவனது நல்லடியார்களுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றான். ஒன்று 'ஈதுல் பித்ர்' எனும் ஈகைத் திருநாள். மற்றையது 'ஈதுல் அல்ஹா' எனும் தியாகத் திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளாகும்.

இஸ்லாத்தை பொறுத்த மட்டில் நன்மைகள் செய்யக் கூடிய நல்வாய்ப்பாகவே பெருநாட்கள். அறிமுகப்படுத்தப்படுகின்றனஇறைவனை அதிகமாக நினைவுகூர்ந்து திக்ர் செய்தல், அவனுக்கு நன்றி செலுத்தல், தானதருமங்கள் செய்தல், நல்வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளல் மூலம் இணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலிமையாக்கிக் கொள்ளல், பகைமையும் குரோதமும் களைந்து உற்றார் உறவினர்களை சந்தித்து உறவுகளை பலப்படுத்திக் கொள்ளல், நோயாளிகளை நலன் விசாரித்தல், அண்டை அயலாரோடு பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொள்ளல், பகை கொண்ட உள்ளங்களை சேர்த்து வைத்தல், பெற்றவர்களை மனம் குளிரச் செய்தல், நன்மையை ஏவி தீமையை தடுத்தல் போன்ற நற்செயல்களில் ஈடுபடுவதுடன் அனுமதிக்கப்பட்ட வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு இன்புற்று மகிழுமாறு இஸ்லாம் வழிகாட்டியுள்ளது. 

இதற்கு மாற்றமாக பண்டிகை என்ற பெயரில் மது அருந்தி, போதையில் மிதந்து, சூதாட்டத்தில் புதைந்து, வீடுகளிலும் வீதிகளிலும் வன்முறையை ஏற்படுத்தி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு, துன்புற்று சீரழியும் நிலையை இஸ்லாம் தடுத்துள்ளது.

ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாளை பொறுத்தமட்டில் புனிதமிகு ரமழான் மாதத்தில் நோன்பு எனும் உயர்தரமான கடமையை நிறைவேற்றி களைப்புற்ற மனிதர்களைக் களிப்பூட்டி மகிழ்வித்து அவர்களின் உள்ளங்களில் உவகைப் பேரூற்றினை பீறிட்டுப் பாயச் செய்து தனது இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. 

தனது அடியார்கள் இழைத்த பாவக்கறைகளை ரமழான் மாத நோன்பின் மூலம் அகற்றி சுத்தப்படுத்தி, நரகவாசிகள் என்ற கருப்புப் பட்டியலிலிருந்து அவர்தம் பெயர்களை நீக்கி, அளவிட முடியாதளவு அபரிமிதமான நன்மைகளை வழங்கி அவர்களின் மதிப்பை இறைவன் உயர்த்துகின்றான். 
அத்தகையவனுக்கு நன்றி செலுத்தாமலும் உள்ளத்தால் களிப்படையாமலும் எவ்வாறு இருக்க முடியும்?! இந்த இன்பக்களிப்பை வெளிப்படுத்தி கொண்டாடி மகிழவே ஈதுல் பித்ர் எனும் ஈகைத் திருநாளை இறைவன் அளித்திருக்கின்றான்.

இஸ்லாமிய மார்க்க சட்டத்தின்படி ஹிஜ்ரி முதலாம் ஆண்டு தான் பெருநாள் தொழுகை விதியாக்கப்பட்டது. இது சுன்னத் முஅக்கதா வகையை சேர்ந்ததாகும் என எல்லா இமாம்களும் ஏகோபித்து ஏற்றுக் கொள்வதாக இமாம் நவவி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். நபி (ஸல்) அவர்களும் ஸஹாபக்களும் தொடர்ந்து இதனை தொழுது வந்திருக்கிறார்கள். “நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது அஞ்ஞான கால வழக்கத்தில் இருந்து வந்த இரண்டு தினங்களை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'அல்லாஹ் இந்த இரண்டு தினங்களுக்கும் பதிலாக வேறு இரண்டு தினங்களை உங்களுக்கு கொண்டாடுவதற்குரிய தினங்களாக ஆக்கிவிட்டான். அவை ஈதுல் அல்ஹா தினமும், ஈதுல் பித்ர் தினமும் ஆகும் என்பதாக குறிப்பிட்டார்கள்' என்று அனஸ் (ரலி) கூறினார்கள். (நூல் : அபூதாவூத்).


பெருநாள் தொழுகைக்குரிய நேரம் சூரியன் உதித்து சுமார் 15 நிமிடங்களின் பின் தொடங்குகின்றது என இப்னு உசைமீன் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பெருநாள் தொழுகை எல்லோருக்கும் வசதியாக ஒரு திறந்த வெளியிலேயே நடத்தப்படுவது சிறந்ததாகும். “நபி (ஸல்) அவர்கள் இரண்டு பெருநாட்களையும் திறந்த வெளியிலேயே நிறைவேற்றியிருக்கிறார்கள்” (ஆதாரம்: புகாரி).

Covid 19 கொரோனாவின் அச்சம், ஊரடங்கு சட்டம், அரசாங்கத்தின் அறிவுறுத்தல்கள் என்பவற்றை கடைப்பிடிப்பது இன்றைய காலகட்டத்தில் கட்டாய கடமையாகும். இதனால் திடல் தொழுகை தவிர்க்கப்பட்டது.


பெருநாள் தினத்தன்று இரண்டு சிறுமிகள் (புஆஸ்) எனும் போர் பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள், 

“இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், “அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடுங்கள். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும்” என்றார்கள். இது பெருநாள் தினத்தில் நடந்தது என்று ஆயிஷா (ரலி) கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி)
அத்தோடு பெருநாள் தினத்தில் 'தப்ஸ்' அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், “அந்தச் சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினம்” என்றார்கள் எனவும் ஆயிஷா (ரலி) கூறியுள்ளார்கள் (ஆதாரம்: புகாரி).

சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் ஈகைத் திருநாள் ஈதுல் பித்ர் Reviewed by www.lankanvoice.lk on மே 24, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.