Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கலிமா ஷஹாதா மொழிந்த ஒருவரை காபிர், முஷ்ரிக் என அழைக்கும் உரிமை எவருக்கும் தரப்பட வில்லை!


 கலிமா ஷஹாதா மொழிந்த ஒருவரை காபிர், முஷ்ரிக் என அழைக்கும் உரிமை எவருக்கும் தரப்பட வில்லை!


"அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடுவதற்கு பாத்திரமான இரக்ஷகன் வேறு எவரும் இல்லை என சாட்சி பகர்ந்தவன் சுவனம் செல்வான்" என்று இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.


ஒரு முஸ்லிம் பகிரங்கமாக இறை நிராகரிப்பை அல்லது இறைவனுக்கு நிகராக வேறு படைப்புகளை இணைவைத்தலை மொழிந்தால் அல்லது செயலில் காட்டினால் அதற்குரிய தீர்ப்பை "ரித்தத்" "அஷ்-ஷிர்குல் அக்பர்" தீர்ப்பை அதற்கு அதிகாரம் தரப்பட்டுள்ள நீதி மன்றமோ  அறிஞர்கள் சபையோ தர முடியும்.


அத்தகைய தீர்ப்பு "தக்பீஃர்" என அறியப்படுகிறது, அதற்குரிய அதிகாரம் பொதுமக்களுக்கோ, அமைப்புகளை சார்ந்தவர்களுக்கோ, தனியாட்களுக்கோ தரப்படுவதில்லை.


முஸ்லிம்களுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் இடையில் யுத்தம் இடம் பெறும் சந்தர்ப்பத்திலும் கலிமா ஷஹாதா மொழியும் ஒரு எதிரியை தாக்குவதற்கோ கொல்வதற்கோ இஸ்லாம் அனுமதி தரவில்லை.


ஒருமுறை முஸ்லிம்களுக்கு இடையூறுகள் விளைவிக்கும் அவர்களை ஒளிந்திருந்து தாக்கும் ஒரு எதிரிகள் கூட்டத்தை எதிர்கொள்ள ஹுர்கஹ் என்ற இடத்திற்கு இறைதூதர் (ஸல்) அவர்கள் உஸாமத் பின் ஸைத் (ரழி) அவர்கள் தலைமையில் ஒரு சிறிய குழுவை அனுப்பி வைக்கிறார்கள்.


அவர்களை நெருங்கிய போது அவர்கள் தப்பியோட அவர்களில் ஒருவரை விரட்டிப் பிடிக்கிறார்கள், அவர் மீது உஸாமா (ரழி) அவர்கள் ஈட்டியால் குறி வைக்கும் போது அவன் ஷஹாதா கலிமாவை சொல்கிறான்.


ஆனால், தற்காப்பிற்காக பயத்தில் தான் தப்பித்துக் கொள்ளும் உபாயமாக அவ்வாறு கூறுகிறான் என எண்ணிய உஸாமா (ரழி) அவனை கொன்று விடுகிறார்கள்.


மதீனா திரும்பியதும் இறைதூதர் (ஸல்) அவர்களுக்கு அந்த தகவல் எட்டுகிறது, உஸாமா (ரழி) அவர்களை அழைத்து லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறிய பின் அவரை எவ்வாற நீர் கொலை செய்வீர் ? என வினவியதோடு அவனது உள்ளத்தை பிளந்து உள்நோக்கத்தை நீர் அறிந்து கொண்டீரா? என கண்டித்தார்கள்..


நாளை மறுமமையில் அவர் மொழிந்த ஷஹாதா விற்கு என்ன பதில் கூறப் போகிறீர் என திரும்பத் திரும்ப கேட்கிறார்கள் அன்பு நபி (ஸல்) அவர்கள்.. ரஸூலுல்லாஹ்வே அறியாமல் செய்து விட்டேன் எனக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேளுங்கள் என உஸாமா (ரழி) மன்றாடினார்கள்..


நான் இன்றுவரை இஸ்லாத்தை தழுவாதவராக இருந்திருக்க வேண்டாமா? என எண்ணி வருந்தினேன் என உஸாமா (ரழி) அவர்கள் கூறினார்களாம், அதாவது இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னுள்ள பாவங்களை  அல்லாஹ் மன்னித்து விடுவானே!  நான் முஸ்லிமாக ஒரு பாரிய குற்றத்தை இழைத்து விட்டேனே என கைசேதப்பட்டார்களாம்.


இன்று அகீதாவில் நிலவும் சில கருத்து வேறுபாடுகளை மையமாக வைத்து, அல்லது இறைதூதர் (ஸல்) அவர்களது வபாஃத்திற்கு பின் ஏற்பட்ட பித்னாக்களை மையமாக வைத்து அல்லது சில பித்அத்துகள்  சிறிய வகை ஷிர்க்குகளை மையமாக வைத்து  எம்மில் சிலர் சிலரை இஸ்லாமிய கோட்டையில் இருந்து வெளியேறிய காஃபிர்களாக, முஷ்ரிக்குகளாக அல்லது வழிகேடர்களாக அடையாளப்படுத்த முனைகின்றனர்.


தனிநபர்களுக்கு மட்டுமல்ல அமைப்புகளுக்கோ, இயக்கங்களுக்கோ அத்தகைய அதிகாரங்கள் தரப்பட வில்லை, அதுவே இஸ்லாம் ஆகும்.


அரபு முஸ்லிம் நாடுகளில் அடிப்படை விசுவாசக் கோட்பாடுகளில் ஒருமைப்பாடுள்ள போதும் இஸ்லாமிய தஃவா, இஸ்லாமிய ஷரீஆ அமுலாக்கம், இஸ்லாமிய எழுச்சி, இஸ்லாமிய அரசியல், ஏன் அரசியல் புவியரசியல் என வெவ்வேறு சிந்தனை முகாம்களில் உள்ளவர்களைக் கூட (பராஅதுத் திம்மாஹ், அல்-கவாரிஜ் என) பரஸ்பரம் பகைமை பாராட்டி அவர்களை நெறிபுரழ்ந்தவர்களாக பரப்புரை செய்து அவர்களுடன் போராட்டத்தை ஆகுமாக்கி இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரிகளிடம் காட்டிக் கொடுத்து தேசங்களை பிணக்காடுகளாக ஆக்கி வருவதனையும் நாம் காணுகிறோம்.


அவ்வாறான அரசியல் புவியரசியல் அதிகார போட்டா போட்டிகள் கிலாபத் தொடர்பிலான பித்னாக்கள் பிரிவினைகள் காரணமாக அகீதா முரண்பாடுகளை மையமாக வைத்து ஏட்டிக்கு போட்டியாக "தக்பீஃர்" மற்றும் பழிவாங்கள் பித்னாக்கள் வன்முறைகள் அரங்கேற்றப்படுவதை நவீன இஸ்லாமிய அறிஞர்கள் கண்டித்துள்ளனர், அல்லது கடந்த கால தவறுகளை திருத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.


அதற்கும் ஒரு படி மேலாக சில தரப்புகள் (தமது ஆட்சி அதிகாரக் கதிரைகளை தக்க வைத்துக் கொள்வதற்காக) இறைநிராகரிப்பாளர்கள் விடயத்தில் (அல்-பராஉ)  உறவு பாராட்டாமல் பகைமை பாராட்டும் பழைய நிலைப்பாடுகளைக் கூட மீளாய்வு செய்து சமாதான சகவாழ்வு பற்றி பேச ஆரம்பித்துள்ளனர், அதிலும் அஹ்லுல் கிதாபுகளான யூத கிரித்தவர்களுடன் இப்ராஹீமிய்ய சகோதரத்துவ உடன்பாடுகளையும் செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.


சிறுபான்மை முஸ்லிம்களாக வாழும் நாம் எமக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை மையமாக வைத்து நானா நீயா எனும் பலப்பரீட்சைகளில் ஈடுபடுவதனை தவிர்த்து இஸ்லாமிய சகோதரத்துவ வாஞ்சையுடன் (அல்-வலாஉ) வேற்றுமைகளுக்கு மத்தியிலும் இணக்கப்பாடுகளை கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும், அதற்காக முற்று முழுதாக தமது கொள்கை கோட்பாடுகளை செல்நெறிகளை சீர்திருத்த பணிகளை சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை!


அதே போல் முஸ்லிம் அல்லாத சகோதர சமூகங்களுடன் மனிதநேய பண்புகளுடன் சமாதான சகவாழ்வை கட்டி எழுப்பவும் தேசிய வாழ்வில் ஐக்கியத்தை புரிந்துணர்வை சகிப்புத் தன்மைகளை கட்டி எழுப்பவும் முயற்சிக்க வேண்டும்.


இஸ்லாமிய தூது முறையாக எத்திவைக்கப்படாத நிலையில் முஸ்லிம் அல்லாத சகலரையும் நிராகரிப்பாளர்களாக பார்ப்பதுவும், அல்லாஹ்வை அறிமுகம் செய்யாத வரை அவர்களை அல்லாஹ்விற்கு இணைவைப்பவர்களாக கருதுவதும், இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தாக வரையில் அவர்களுடன் பகைமை (அல்-பராஉ) பாராட்டுவதும் தவறான புரிதல்கள் ஆகும்.


மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்

08.05.2026

கலிமா ஷஹாதா மொழிந்த ஒருவரை காபிர், முஷ்ரிக் என அழைக்கும் உரிமை எவருக்கும் தரப்பட வில்லை! Reviewed by KR TV LANKAN VOICE on மே 09, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.