எல்-நினோ கால நிலை மாற்றம் குறித்து விழிப்பாக இருப்போம்!
எல்-நினோ கால நிலை மாற்றம் குறித்து விழிப்பாக இருப்போம்!
எல்-நினோ கால நிலை மாற்றம் உலகெங்கும் அனர்த்த நிலையை ஏற்படுத்தி வருவதோடு ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை அதிகரித்து சுமார் 15000 பேரளவில் மரணத்தை தழுவியுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்காசிய நாடுகளில் இந்த வருட இறுதிப் பகுதியிலும் அடுத்த வருட ஆரம்பத்திலும் அதன் தாக்கம் அதிகரித்துச் செல்ல இடமிருப்பதாகவும் வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இலங்கையை பொறுத்தவரை தற்போது நாட்டின் வடக்கு வடமத்திய, கிழக்கு தென்கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை உட்பட சில பகுதிகளிலும் வெப்பநிலை அசாதாரணமாக அதிகரித்து வருவதோடு ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதும் குறிப்பிடத் தக்கது.
வெப்பநிலை அதிகரித்துள்ள பிரதேசங்களில் கடும் வறட்சி நிலை ஏற்பட்டு நீர் நிலைகள் வற்றி பயிர்ச் செய்கைகள் கால் நடைகள் என பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
அத்தோடு பொதுமக்களின் பாவனைக்காக நீர் விநியோகத்தை நபருக்கு ஒரு நாளைக்கு 15 லீட்டர் என ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அக்டோபர் நவம்பர் மாதத்தில் மழை எதிர்பார்க்கப்பட்டாலும் அசாதாரண மழைவீழ்ச்சி ஏற்பட்டால் வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகள் இருப்பதாக எதிர்வு கூறப்படுகிறது.
மலையகத்தில் நீரேந்து பகுதிகளில் அதிகரித்த மழைவீழ்ச்சி ஏற்படின் தித்வா போன்ற அனர்த்த நிலை ஒன்று மீண்டும் ஏற்படாது தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் அரசு ஆராய்ந்து வருகிறது.
வழமையை விட இந்தக் காலப் பகுதியில் காலநிலை அறிக்கைகளை தொடர்ந்து அவதானித்து பொதுமக்களாகிய நாம் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து கொள்தல் கட்டாயமாகும்.
இறைவனிடம் இருகரமேந்தி : "இறைவா இந்த காலநிலை மாற்றத்தை பூமியிற்கும் உயிரினங்களுக்கும் பயிர்பச்சைகளுக்கும் சாதகமானதாக ஆக்கி விடுவாயாக, அதன் சாதகமான விளைவுகளை நாம் உன்னிடம் கேட்கிறோம், பாதகமான விளைவுகளில் இருந்து பாதுகாப்பு தேடுகிறோம்" என்று பிரார்தனை செய்தல் வேண்டும்.
மழைவீழ்ச்சி இல்லாது வெப்பநிலை அதிகரித்து வறட்சி நிலவும் பிரதேசங்களில் முஸ்லிம்கள் மழை வேண்டி தொழுகை நடத்துவதும் ஐவேளை தொழுகையிலும் மழைவேண்டி துஆ செய்வதும் ஸுன்னத்தான வழிமுறையாகும்!
அதிக மழைவீழ்ச்சி உள்ள பிரதேசங்களில்: "இறைவா இந்த மழை வீழ்ச்சியை எமக்கு சாதகமாக பயனுள்ளதாக ஆக்கி விடுவாயாக என்றும், வறட்சி நிலவும் பிரதேசங்களுக்கு அதனை பொழியச் செய்வாயாக" என்றும் நாம் பிரார்தனை செய்தல் வேண்டும்.
காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப எமது தாய் மொழியில் எமது பிரார்தனைகளை நாம் அமைத்துக் கொள்ளலாம், எல்லா பிரார்தனைகளும் கட்டாயமாக வசனத்திற்கு வசனம் அல்குர்ஆன் அல்ஹதீஸ் என்பவற்றில் சொல்லப்பட்டவையாக இருக்க வேண்டும் என்பதில்லை.
எல்லாம் வல்ல அல்லாஹ் எல்-நினோ கால நிலை மாற்றத்தின் தாக்கங்களில் இருந்து மக்களையும் விலங்குகள் உயிரினங்கள் மற்றும் பயிர் பச்சைகளையும் பாதுகாப்பானாக!
மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
24.08.2026 || SHARE

Comments