Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் அவதானிக்கப்பட்ட போக்குவரத்து பாதுகாப்பு நிலை – அதிகாரிகளின் உடனடி கவனம் அவசியம்!


 ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் அவதானிக்கப்பட்ட போக்குவரத்து பாதுகாப்பு நிலை – அதிகாரிகளின் உடனடி கவனம் அவசியம்!


இன்று ஜும்ஆ தொழுகை முடிந்து வீதியில் பயணிக்கும் போது, கடந்த சில காலங்களுடன் ஒப்பிடுகையில் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பில் கவலைக்கிடமான சில விடயங்களை அவதானிக்க முடிந்தது.


சில காலமாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் நடவடிக்கைகளின் காரணமாக இளைஞர்கள் பெருமளவில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள்களில் பயணித்து வந்ததை அவதானிக்க முடிந்தது. ஆனால் இன்று பல இளைஞர்கள், குறிப்பாக சிறுவயதினரை ஒத்த இளைஞர்கள், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் பயணித்ததை காண முடிந்தது.


மேலும், குறுக்கு வீதிகளில் இருந்து பிரதான வீதிக்குள் நுழையும் போது போக்குவரத்து விதிகளை கவனிக்காமல் மிக வேகமாக பயணிப்பதும், பிரதான வீதியை கடக்கும் போதும் வேகத்தை குறைக்காமல் செல்வதும் அவதானிக்கப்பட்டது.


சிக்னல் கம்பத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள சந்தியிலும் பல்வேறு திசைகளிலிருந்து வரும் சில இளைஞர்கள் சிக்னலை முறையாக அவதானிக்காமல், ஹெல்மெட் அணியாமலும் குறுக்கும் மறுக்குமாக மோட்டார் சைக்கிள்களில் பயணித்ததை காண முடிந்தது.


குறிப்பாக, அந்த சிக்னல் அமைந்துள்ள சந்தியில் சில காலமாக பொலிஸார் தொடர்ச்சியாக கடமையில் ஈடுபட்டு வந்தனர். இதனால் வாகன சாரதிகள் மற்றும் இளைஞர்கள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதில் அதிக கவனம் செலுத்தியிருந்தனர். ஆனால் தற்போது சில காலமாக அந்த இடத்தில் பொலிஸாரின் நடமாட்டத்தை காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை கவலையளிக்கிறது.


அதேபோன்று கடற்கரைப் பகுதியிலும் சில காலமாக பொலிஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அங்கும் பொலிஸாரின் கண்காணிப்பு குறைந்துள்ளமை இளைஞர்களின் கட்டுப்பாடற்ற வாகனப் பயணங்களுக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.


மிகவும் வேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்துவது, ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துவது மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகளை அலட்சியம் செய்வது போன்ற நடவடிக்கைகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டியவை.


குறிப்பாக இரவு நேரங்களில் சில இளைஞர்கள் குழுக்களாக இணைந்து மோட்டார் சைக்கிள்களில் வேகமாக பயணித்து, அருகிலுள்ள கிராமங்களுக்குள் செல்வதுடன், அப்பகுதி மக்களுக்கும் அச்சத்தையும் இடையூறையும் ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த காலங்களில் ஏற்பட்ட பல வீதி விபத்துக்களை கருத்திற்கொண்டு, இவ்வாறான நிலைமை மீண்டும் விபத்துக்கள் மற்றும் பெறுமதிமிக்க உயிரிழப்புகளுக்கு காரணமாகிவிடுமோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.


எனவே, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இந்த விடயத்தில் உடனடி கவனம் செலுத்தி, சிக்னல் சந்தி, பிரதான வீதிகள், குறுக்கு வீதிகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் மீண்டும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


ஹெல்மெட் அணியாதவர்கள், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்துவோர், அதிக வேகத்தில் பயணிப்போர் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள்களை வேகமாக செலுத்தும் குழுக்களையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


விபத்து ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை எடுப்பதைவிட, விபத்து ஏற்படுவதற்கு முன்னரே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்தது.


பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கி, சட்டத்தை அனைவருக்கும் சமமாக அமுல்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


பாதுகாப்பான வீதி என்பது அனைவரினதும் பொறுப்பு. விதிகளை கடைப்பிடிப்போம்; உயிர்களை பாதுகாப்போம்.


KR TV Network

Comments