இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடனான கலந்துரையாடலின்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை
நேற்றைய தினம் (2026-08-13)
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடனான கலந்துரையாடலின்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை இது:-
இங்கு கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பான எமது கருத்தையும், இந்த செயற்பாடு தொடர்பில் எமது அணுகுமுறைக்குக் காரணமான விடயங்களையும் சுருக்கமாக முன்வைக்க நான் எதிர்பார்க்கின்றேன். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று காலை ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. இன்று மாலை நாம் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில் உங்களது நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டில் இருந்துகொண்டே இங்கு வந்துள்ளீர்கள். நான் குறிப்பிடத்தக்க அளவு திறந்த மனதுடன் இந்த சந்திப்பிற்கு வர முயற்சித்தேன். திறந்த மனதுடன் வருவதே எனது நோக்கமாக அமைந்தது.
எப்படி இருப்பினும் எமது நாட்டில் கலந்துரையாடலின் பின்னர் எதையும் சொல்வதற்கு திறந்தவாய்ப்பு உள்ளதாக நான் நினைக்கின்றேன், . ஆனால் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் போது, காலையில் ஒரு அறிக்கையின் மூலம் கலந்துரையாடலின் உள்ளடக்கம், சாரம்சம், முன்வைக்கப்படும் விடயங்களைக் கூறுவது மிகவும் நல்லதொரு விடயம் என நான் கருதவில்லை. அது ஒரு திறந்த கலந்துரையாடலுக்குத் தடையாக அமைகின்றது என்பதே எனது எண்ணமாகும். உங்கள் தரப்பிற்கு இருக்கும் முழுமையான உரிமையை ஏற்கின்ற நிலையிலே நான் இந்த கருத்துக்களை முன்வைக்கிறேன்.
அடுத்து சட்டத்தரணிகள் தலைவர் முன்வைக்கும் விடயங்களை அவர் தனிப்பட்ட ரீதியில் முன்வைப்பதாக ஒருபோதும் கருதவில்லை. நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் சமூகத்தின் கருத்தாகவே நான் அக்கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். எந்தவிதத்திலும் உங்களது கருத்துக்களை தனிப்பட்ட கருத்தாக கருதவில்லை.
இரண்டாவதாக, இது சட்டத்தரணிகளின் ஒட்டுமொத்தக் கருத்து என்று உங்களுக்குச் சொல்ல முடியும் . இது முழுமையான கருத்து அல்ல என்று வேறொருவருக்குச் சொல்ல முடியும் பெரும்பான்மை என்று இன்னொருவரும் சிறுபான்மை கருத்து என மற்றொருவரும் சொல்லலாம்.இது எம்மனைவருக்கும் விவாதத்திற்குரிய ஒரு விடயம். இது ஒட்டுமொத்த கருத்தா, பெரும்பான்மையா, சிறுபான்மையா என்பது விவாதத்திற்குரிய விடயம். அது தொடர்பாக நாம் சரியாக ஒரு முடிவுக்கு வர வேண்டிய அவசியமில்லை என்று நான் நினைக்கின்றேன்.
மூன்றாவதாக எனது அணுகுமுறை அரசியலமைப்பிற்கு அமையவே இருக்கின்றது. நான் எந்தவிதத்திலும் எனது நிறைவேற்று அதிகாரத்தையோ அல்லது எம்மிடம் இருக்கும் அதிகாரத்தையோ அரசியலமைப்பிற்கு அப்பால் பயன்படுத்த மாட்டேன்.
அடுத்து இந்த அரசியலமைப்புத் திருத்தத்தினால் முன்பிருந்த ஜனாதிபதிக்கு போக வேண்டியேற்பட்டது போல உங்களுக்கும் போக வேண்டிவரும் என்று உபுல் கூறியிருந்தார். நான் போவதற்குத் தயார். நான் இவற்றில் தொடர்ந்து அமர்ந்திருந்க வந்தவனல்ல. அதேபோல் நான் இந்த மாற்றத்தைச் செய்வதற்காக சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் ஒரு மனிதன். சவால் இன்றி ஒரு மாற்றம் நிகழும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு மாற்றம் எப்போதும் ஒரு சவாலை தாங்கிக்கொண்டே நிகழ்கின்றது.
உயிர்த்த ஞாயிறு விசாரணை இதற்கு சிறந்த உதாரணம். புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்புபட்டதாகவே உயிர்த்த ஞாயிறு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனது பாதுகாப்பிற்கும் பொறுப்பானவர்களும் அவர்கள்தான். ஆனால் நான் விசாரணைகளை முன்னெடுக்கிறேன். அதற்குள் உயிர் ஆபத்து இருக்கின்றது என்பதை நான் அறிவேன். ஆனால் ஆபத்தைத் எதிர்கொள்ளாமல் ஒரு மாற்றத்தைச் செய்ய முடியும் என நான் கருதவில்லை. அதனால் நான் இந்நாட்டு மக்களுக்காக ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றேன். அந்த ஆபத்தான செயற்பாட்டினால் எனது பதவி பறிபோகுமாயின், அதனை ஏற்றுக்கொண்டு நான் ஒதுங்கிச் செல்லத் தயார். அதற்கு நான் ஆயத்தமாக உள்ளேன்.
அடுத்து சலுகைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயம் . சலுகைகளின் எல்லை எங்குள்ளது? தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் எதிர்காலத்தில் பிரதம நீதியரசர் நாற்காலியில் அமரவைப்பதற்கு செயற்படுவது எவ்வாறு சலுகையாகாமல் இருக்கும்? அவ்வாறு நடந்த வரலாறு இருக்கிறது.
தான் தெரிவு செய்யும் ஒருவரை அவர் எவ்வாறு பிரதான ஆசனத்தில் அமரவைப்பார்? இவை தனிப்பட்ட ஒருவரை மையமாகக் கொண்ட சலுகைகள். உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கையை 11 இலிருந்து 17 வரை அதிகரிப்பது மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் எண்ணிக்கையை 12 இலிருந்து 20 வரை அதிகரிப்பது என்பன தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழுவை உயர் நீதிமன்றத்திற்கும் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமிப்பதை இலக்காகக் கொண்டு மேற்கொள்வதாக சிலர் சிலர் குறிப்பிடலாம்.
அதனால் நாம் நீதித் துறையில் ஏற்படுத்தும் ஒவ்வொரு மாற்றத்தையும் ஒரு சலுகையாக அல்லது இன்னுமொருவருக்குச் செய்யும் தகாத செல்வாக்காக குறிப்பிட முடியும் என நான் நினைக்கின்றேன்.
அண்மைக் காலத்தில் இடம்பெற்ற மாற்றங்கள் சிலவற்றைப் பார்த்தால், 11 இலிருந்து 17 வரை நீதிபதிகள் தொகை அதிகரிக்கும் போது இவ்வாறு அர்த்தம் கற்பிக்கலாம். தான் தேர்ந்தெடுத்த ஆறு பேர் இருக்கின்றார்கள், அந்த ஆறு பேரைக் கொண்டுவரவே இவ்வாறு செய்யப்படுவதாக கூறலாம். உயர் நீதிமன்றத்தில் செய்யும் எந்தவொரு மாற்றமும், அது சம்பள அதிகரிப்பிலிருந்து அல்லது வாகன அனுமதிப்பத்திரம் ஒன்றை வழங்குவது வரை சலுகையாக குறிப்பிட முடியும்.
எனவே, இது தனிப்பட்ட ஒருவரை மையமாகக் கொண்ட சலுகையாக அமையாத வகையில் எவ்வாறு மேற்கொள்வது என்பதில் நான் அதிகபட்ச முயற்சி செய்தேன். அதனால் இதனை ஒரு சலுகையாக நான் கருதவில்லை. இதனை நீதிமன்றம் தற்பொழுது உள்ள நிலையிலிருந்து இன்னுமொரு நிலைக்கு முன்னேற்றுவதாகவே கருதப்படுகிறது. இது நீதிமன்றக் கட்டமைப்பு முழுவதையும் இருக்கும் நிலையிலிருந்து இன்னுமொரு நிலைக்கு மாற்றும் முயற்சியாகும். அதனை ஒருவரைக் இலக்காகக் கொண்ட சலுகையாக நான் கருதவில்லை.
இன்னும் சிலர் ஓய்வு பெற்றுச் சென்றார்கள், அதற்கு முன்னர் இதனை செய்திருக்க முடியுமென்று சொல்வர்? இல்லை, இதனை முன்னெடுக்கும் எந்தவொரு தருணத்திலும் அதற்கு முந்தைய நாள் ஒருவரும் ஓய்வு பெற முடியும். இதனைச் செய்த பின்னர் இன்னுமொருவருக்கு இந்த நன்மை கிடைக்கலாம். இல்லையெனில் இது என்றைக்குமே நடக்காத ஒன்றாகிவிடும். அதனால் இதனை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் செய்வதானால், அந்த சமயத்தில் ஒரு குழுவினர் ஓய்வு பெற்றிருப்பார்கள். அதே நேரத்தில் ஒரு குழுவினர் ஓய்வு பெறும் வயதை நெருங்கியிருப்பார்கள். அது இந்த நீதிமன்றக் கட்டமைப்பில் எந்தவொரு தருணத்திலும் நிலவுகின்ற ஒன்றாகும். அதனால் அதனை தவறான வரப்பிரசாதமாக நான் கருதவில்லை, ஒரு குழுவினருக்குச் செய்யும் தகாத செல்வாக்காக நான் கருதவில்லை.
நீங்கள் திட்டவட்டமாகக் குறிப்பிட்ட வெற்றிடங்களை நிரப்புவது பற்றிய விடயத்தை ஒரு மாத காலத்திற்குள் முடிப்பேன். உயிர்த்த ஞாயிறு வழக்கு விசாரிக்கப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு வழக்கில் 23,000 குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. 3,000 சாட்சிகள் இருக்கின்றார்கள். மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தை மேல் நீதிமன்றங்களில் இருக்கும் மிக சிரேஸ்ட நீதிபதிகள் தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். நீங்கள் கூறுவது போலவே அடுத்து மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவர்களுக்குத்தான் இருக்கின்றது.
அவ்வழக்கு இறுதிப் கட்டத்தில் இருக்கின்றது. அது சமூகத்தில் நீதி தொடர்பான பெரிய எதிர்பார்ப்புடன் பார்க்கப்படும் ஒரு வழக்கு. அது எம்மனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டால் அவ்வழக்கிற்கு ஏற்படும் தாக்கம் என்னவென்று உங்களுக்கு புரியும். அவரை நியமிக்காது விட்டால் அவருக்கு பாதிப்பு ஏற்படும். அத்தோடு அவர் ஒரு விசேட வழக்கை விசாரிப்பதன் ஊடாக அவருக்கு அநீதி இழைக்கப்படுகிறதா எனவும் நான் யோசித்தேன். இது தான் செல்வாக்குச் செலுத்துவதாகும்.
அவ்வாறாயின் மேல்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு அழுத்தம் ஏற்படாதா? . உயர் நீதிமன்ற வெற்றிடங்கள் குறைந்து வருகிறது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தில்தான் பிரச்சினை உருவெடுத்துள்ளது. அதனால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை வெற்றிடமாக வைத்துக்கொண்டு மேல்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து ஒரு குழுவை, உயர் நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்வது பொருத்தமற்றது என நான் கருதுகிறேன்.
அதனால் எந்தவொரு தனிநபர் குறித்தும் சிந்தித்து, அவர் தகுதிகளைப் பெறும் வரை பார்த்துக்கொண்டு இந்த வெற்றிடங்களை வைத்திருக்கவில்லை என்பதை நான் மிக நேர்மையாகச் சொல்கின்றேன் . சமூகத்தில் பெரும் கவனத்திற்குள்ளான, உயிர்த்த ஞாயிறு வழக்கு முடியும் வரை மட்டுமே இந்த வெற்றிடங்கள் இருந்தது .
மிக விரைவில் இந் வழக்கை நிறைவு செய்ய முடியும் என்று இன்றும் அறிக்கையிடப்பட்டிருந்தது . அப்படியாயின் அந்த நீதியை நிலைநாட்டும் நோக்கம் மட்டுமே எனக்கு இருந்தது. அதுவே நீதிமன்றத்தின் சுயாதீனம் பற்றிய சிறந்த உதாரணம் என்று நான் நினைக்கின்றேன் . அந்த நீதியை எதிர்பார்க்கும் மனிதர்களின் எதிர்பார்ப்பிற்கான சிறந்த உத்தரவாதமாக இதனை நான் நினைக்கின்றேன். எனக்கு வேண்டுமானால் உயிர்த்த ஞாயிறு வழக்கை இழுத்தடித்திருக்க முடியும். 23,000 குற்றச்சாட்டுகளும் 3,000 சாட்சிகளும் கொண்ட இந்த வழக்கை யார் மீண்டும் வந்து விசாரிப்பார்கள்? எப்போது மக்களுக்கு நீதியை வழங்கப் போகிறோம்?
ஆனால் ஒருவருக்கு நியாயத்தை நிலைநாட்டுவதற்காக சிலருக்கு அநீதி இழைக்கப்பட்டதை நான் அறிவேன். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஏற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு நியாயம் நிறைவேற்றப்பட்டுள்ளதா? ஆனால் உயர் நீதிமன்றத்தை விட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில்தான் பிரச்சினை இருக்கின்றது . அது குறித்து நான் யோசித்தேன். அந்த நியமனங்கள் பற்றிய எனது கருத்து அது தான்.
வழக்கொன்றைத் தாக்கல் செய்து விரைவாக வழக்கை விசாரிப்பதிலா அல்லது வழக்குத் தாக்கல் செய்வது வரையிலான பயணத்திலா நீதி நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியம் இருக்கிறது ? நீங்கள் குறிப்பிட்டது போல் அதுவும் முக்கியமானது. அப்படியாயின் முதலாவதாக எமது புலனாய்வு நடைமுறை வலுப்படுத்தப்பட வேண்டும். இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே உள்ளது. எந்த இடத்தில் இலஞ்சக் குற்றச்சாட்டு எழுந்தாலும் இங்குதான் வர வேண்டும். இலஞ்ச ஆணைக்குழுவின் 24 கிளை அலுவலகங்களை நாடு முழுவதும் திறப்பதற்கு நான் எதிர்பார்க்கின்றேன். அதற்காக 373 அதிகாரிகளை நியமிப்பற்கு இப்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சாதாரண அரச சேவையின் சம்பள அளவுகளை விட உயர்வான ஒரு சம்பள அளவுடன் அந்தப் புலனாய்வு அதிகாரிகளை நியமிப்பதற்கு நான் முகாமைத்துவத் திணைக்களத்துடன் கலந்துரையாடி அனுமதி பெற்றுக்கொடுத்துள்ளேன். இந்த புலனாய்வு அதிகாரிகளுக்கு உயர்ந்த சம்பளம் வழங்க வேண்டும். ஏனெனில் புலனாய்வு செயற்பாடுகளுக்காக இலஞ்ச ஆணைக்குழுவின் நடைமுறையை வலுப்படுத்த வேண்டும்.
அடுத்து, இலங்கை பொலிஸின் கடமைப் பணியாளர்களின் எண்ணிக்கை 102,000 ஆக உள்ளபோதும் இன்று பொலிஸில் 72,000 பேர் மட்டுமே உள்ளனர். அதிலும் சுமார் 4,000 பேர் மருத்துவ விடுமுறையில் சீருடைப் பணிகளில் ஈடுபடாது இருக்கின்றார்கள். அப்படியாயின் 102,000 பேரில் 68,000 பேர் தான் பணியாற்றுகின்றனர். இந்த குறைந்தளவான பொலிஸாரைக் கொண்டுதான் நாம் இந்த விசாரனைகள், புலனாய்வுகள் பற்றிய பணிகளை நிறைவேற்ற எதிர்பார்க்கின்றோம். இலங்கையில் கடமை நேரத்தில் அதிகளவில் உயிரிழந்திருப்பது பொலிஸ் அதிகாரிகளாவர். கடந்த ஆண்டில் கடமை நேரத்தில் 1100 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளார்கள். அவர்கள் 18 - 20 மணித்தியாலங்கள் வேலை செய்கின்றார்கள். அதனால் புதிதாக 10,000 பேரை பொலில் சேவைக்கு சேர்த்துக்கொள்ள எதிர்பார்க்கிறோம். அவர்களின் சீருடையை மாற்ற, அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்களை வழங்க நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். ஏனெனில் புலனாய்வை வலுப்படுத்துவது நமக்கு அவசியமானது. புலனாய்வுகளுக்காக நீண்ட காலம் எடுப்பதை நான் கண்டிருக்கின்றேன். ஏனெனில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை விசாரணை செய்ய ஆட்கள் போதுமாக இல்லை. அதனால் நாம் புலனாய்வு நிறுவனங்களை வலுப்படுத்தி வருகின்றோம்.
அடுத்து புலனாய்விற்கு உதவுவதற்கும் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் சட்டமா அதிபர் திணைக்களம் வலுப்படுத்தப்பட வேண்டும். உண்மையில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஒரு பிரச்சினை இருக்கின்றது. திறமையான, அனுபவமிக்க சட்ட அதிகாரிகள் விலகிச் செல்கின்றார்கள். நாம் தற்போது 50 பேரை இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளோம். அதேபோல் அவர்களின் பதவி உயர்வு நடைமுறையில் குறைபாடு உள்ளது. இந்த பதவி உயர்வு நடைமுறையை மாற்றுவதற்கு அமைச்சர் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.
அதேபோல் கம்பனி வழக்குகளை விசாரிக்கும் போது அவர்களுக்கு கொடுப்பனவொன்று வழங்கப்படுகிறது. அந்தக் கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் நான் இருக்கின்றேன். அவர்களுக்கு உயர்ந்ததொரு சம்பள அளவை வழங்காது சிறந்த சட்ட அதிகாரியை நம்மால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் உருவாக்க முடியாது. அப்படியாயின் அதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்னர் ஆரம்பக் கட்டப் பணிகளை ஆயத்தப்படுத்துகின்றோம் இந்த அரசியலமைப்புத் திருத்தம் தாமதமாகவே முன்வைக்கப்படுவதாக நான் நம்புகின்றேன். இந்த அரசியலமைப்புத் திருத்தம் 20 ஆவது திருத்தத்துடன் இணைந்ததாக இடம்பெற்றிருக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். 20 ஆவது திருத்தத்தில் உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்களின் எண்ணிக்கை 11 இலிருந்து 17 வரை அதிகரிக்கும் போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 12 இலிருந்து 20 வரை அதிகரிக்கும் போது, உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் ஆறு பேருமே மேல்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து நியமிக்கப்படுவதாக நாம் யூகித்தால், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் 06 வெற்றிடங்கள் உருவாகின்றன. புதிதாக 08 பேர் நியமிக்கப்பட்டாலும் 14 பேரே மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படுகின்றார்கள்.
நீதிபதிகள் தொகையை 20 பேர் ஆக மாற்றுவதற்கு, 14 புதியவர்களை நியமிக்க வேண்டும். இந்தத் திருத்தம் இதற்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அனுபவம் வாய்ந்த குழுவை வைத்துக்கொண்டு இந்த அதிகரிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டிய நேரம் அது என்று நான் கருதுகிறேன். ஆனால் அது நடக்கவில்லை, அது கடந்த கால விடயம்.
ஆகவே, நீதித்துறையில் அனுபவமுள்ள, 65 அல்லது 60 வயதுடைய சில நீதிபதிகள் தீர்ப்புகளை எழுதுகிறார்கள் . ஆனால் தீர்ப்பு எழுதுபவரை மட்டும் தேர்ந்தெடுத்து இதனை வழங்க முடியாது அல்லவா? அதுதான் முறையற்ற சலுகை, முறையற்ற தலையீடு. ஒரு தீர்ப்பை முறையாக எழுதுபவரைத் தேர்ந்தெடுத்து பதவி வழங்குகிறார் என்றால், அதனைத் தேர்ந்தெடுப்பது யார்? அந்தத் தேர்ந்தெடுப்பவர் மீது அது சார்ந்திருக்காதா? அதனால், இது பக்கச்சார்பான அடிப்படையில் செய்யப்பட்டதாக நான் கருதவில்லை. ஏதேனும் மதிப்பீட்டு முறையின்படி இதனை மேற்கொள்ள முடிந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அந்த மதிப்பீட்டு முறையினால் ஒருபோதும் வெளிப்படைத்தன்மை பாதுகாக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. அதனால்தான் முழு கட்டமைப்பிலும் ஏற்படுத்தப்படும் ஒரு மாற்றத்தினால்தான் இந்த நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று கருதினேன்.
அப்படியானால் வழக்குகள் விரைவாக நிறைவு செய்யப்படுமா என்ற கேள்வி எழுகிறது?. நான் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறேன். மாகாண மட்டத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற விசாரணைகளை நடத்த முடியும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இல்லையெனில், மேன்முறையீட்டு நீதிமன்ற அதிகாரம் பரவலாக்கப்படுவதில்லை, மேன்முறையீட்டு நீதிமன்றம் மையப்படுத்தப்பட்டதாக இருந்து சில ஆண்டுகளுக்கு மாகாண மட்டத்தில் அமர்வுகளை நடத்த முடியும். அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கான அவசியமான கட்டமைப்பு வசதிகளை நாம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
ஆகவே, அதற்கு ஏற்ற வகையில் நான்கு பேரினால் நீதிபதிகளின் தொகையை அதிகரிப்பதை உள்ளடக்கியிருக்கிறேன். மேல்முறையீட்டு நீதிமன்ற விசாரணைகளை வேறு இடங்களில் நடத்தத் தீர்மானித்தால், அதற்குத் தேவையான நீதிபதிகளின் எண்ணிக்கையை வழங்குவதற்காக இந்த நாள்வரை பயன்படுத்தலாம். மேலும், மேல்நீதிமன்றங்களில் பெருமளவிலான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. நாம் பிரதானமாக 10 மாவட்டங்களில், 11 நீதிமன்றங்களை அமைக்க இணங்கண்டுள்ளோம். 11 புதிய நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
தற்பொழுது குருநாகல் போன்ற இடங்களில் நாம் சுமார் 11 புதிய நீதிமன்றங்களை அமைக்கத் தீர்மானித்துள்ளோம். அந்தப் புதிய 11 நீதிமன்றங்களை அமைத்துக்கொள்ள வேண்டுமென்றால் நமக்கு என்ன தேவை, அங்கும் மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும். எனவே, தற்போது 110 ஆக உள்ள மேல்நீதிமன்ற நீதிபதிகளின் தொகையை 120 ஆக அதிகரிக்க நாம் ஒரு முடிவை எடுத்துள்ளோம், ஏனெனில் புதிய மேல்நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.
மேல்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் போன்று மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாமாக இல்லை. ஆனால் மேல்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஆசனமொன்று இல்லை என்றால், அவர் மேல்நீதிமன்ற நீதிபதியாக முடியாது . பதவிக்காலம் முழுமையாக இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படும் போது அனைத்து நியமனங்களும் முடக்கப்படுவதாக கூறினாலும் அவ்வாறு முடக்கப்படாது. உயர் நீதிமன்றம் முடக்கப்படும். மேல்முறையீட்டு நீதிமன்ற வெற்றிடங்கள் அந்த நான்கு பேரினால் நிரப்பப்படும். நாம் புதிதாக மேல்நீதிமன்றங்களை உருவாக்கும் அளவுக்கு மேல்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள். ஆகவே நீதவான் நீதிமன்ற நீதிபதிகளுக்கு மேல்நீதிமன்ற நீதிபதியாவதற்கு மேலும் இரண்டு வருடங்கள் காத்திருக்கத் தேவையில்லை. அதற்கு ஏற்ப நீதவான்களுக்கும் பதவிஉயர்வுகள் கிடைக்கும்.
நீதவான் நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் உள்ளதாக குறிப்பிடுகிறீர்கள். அப்படியானால் நீதவான் நீதிமன்றங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் . மேலும், நீதவான் நீதிமன்றங்களுக்கு , 50 நீதவான்களை நியமிப்பதற்காக நாங்கள் தற்போது நீதிச்சேவை ஆணைக்குழுவுடன் பணியாற்றி வருகிறோம். நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, அதை என்னால் தீர்மானிக்க முடியாது. ஆனால், ஒரு குழுவினால் தெரிவுகள் நடைபெறும் போது, அவர்களில் 32 பேர் மட்டுமே தகுதி நிலையில் இருந்தால், 33 பேரை நியமிக்க வேண்டும் என்று என்னால் கூற முடியாது, அவை முறையற்ற தலையீடாகும். 50 பேரை நியமிக்க வேண்டும் என்று என்னால் கூற முடியாது. அந்தக் குழுவே அது தொடர்பில் முடிவு செய்யும். அவர்கள் எதிர்பார்க்கும் தகுதி நிலையில் உள்ளவர்களை நியமிக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது. அதுதான் சுயாதீன செயற்பாடு. இல்லையென்றால், 50 பேரைத் தெரிவு செய்ய முடிவு செய்த பின் ஏன் 32 பேரை நியமிக்கிறார்கள் என்று நான் கூறப்போவதில்லை. அது உகந்ததல்ல. தெரிவு செய்யும்அந்தக் குழுக்களுக்கு, அவர்கள் எதிர்பார்க்கும் தகுதி நிலையில் இல்லை என்றால், அவர்களை நியமிக்காமல் இருக்க உரிமை உள்ளது.
இவ்வாறு தான் நீதித்துறை கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது. மறுபுறம், நீதிமன்றங்களை அதிகரித்தாலும் நம் நாட்டின் தொழில்சார் துறைகளில் அதிகாரிகளை இணைத்துக் கொள்வதில் பற்றாக்குறை உள்ளது. அவர்களை தக்கவைத்துக் கொள்வதிலும் சிரமம் உள்ளது. அதனால்தான் வைத்தியர்களின் வயது 60 இல் இருந்து 63 வரை அதிகரிக்கப்படுகிறது. முதன்முதலில் விசேட வைத்தியர்களின் வயது மட்டுமே அதிகரிக்கப்பட்டது, அடுத்தது பொது வைத்தியர்களின் வயதெல்லையும் 63 வரை அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் அரச சேவையில் வைத்தியர்களின் வயதெல்லை 63 வயது வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் , இந்தத் தொழில்சார் துறையில் உள்ளவர்களைப் பாதுகாப்பதே நமது முதல் கடமையாகும். அதனால்தான் நீதிபதிகளின் வீட்டுப் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் அனைத்தையும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் தீர்த்து வைக்க இருக்கிறோம். சிலவற்றை வரவு செலவுத் திட்டத்திற்கு முன்பே தீர்க்க நான் எதிர்பார்க்கிறேன்.
அடுத்ததாக, நீதித்துறையில் 1007 ஊழியர்களுக்கான வெற்றிடம் இருப்பதாக நான் நினைக்கிறேன். நீதித்துறையில் சுமார்1,000 சிற்றூழியர்களுக்கான பற்றாக்குறை உள்ளது. 1,007 வெற்றிடங்களில், சுமார் 260 பேரை நியமிக்க நாங்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 700 பேரையும் நாங்கள் நியமிப்போம். தற்போது, 260 வெற்றிடங்களுக்கு 21,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன, அதுதான் பிரச்சினை. நாங்கள் ஆட்சேர்ப்பு செயல்முறையின் மூலம் வெற்றிடங்களை நிரப்புவதில்லை, முறையான போட்டிப் பரீட்சை அல்லது நேர்முகத்தேர்வு மூலம் தான் நாங்கள் ஆட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த 1007 வெற்றிடங்களையும் நாங்கள் நிரப்புவதோடு தேவையான வசதிகளையும் வழங்குவோம்.
அதுபோலவே, எமது நாட்டில் இடையில் நிறுத்தப்பட்ட ஏராளமான நீதிமன்றக் கட்டிடங்கள் உள்ளன. ஒப்பந்தக்காரர்களுடன் தீர்த்துக்கொள்ள முடியாத பிரச்சினைகளைக் கொண்ட இரண்டு நீதிமன்றங்கள் தவிர, அந்தப் பிரச்சினைகளைக் கொண்ட நீதிமன்ற கட்டமைப்பை விடுத்து மற்றைய அனைத்து நீதிமன்றங்களையும் அமைப்பதற்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, புதிதாக தற்காலிக வாடகை வீடுகளில் நடாத்திச் செல்வதற்காக மேலும் 11 நீதிமன்றங்களை அமைக்க கோரியுள்ளனர். அந்த பதினொன்றிலும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் நிர்மாணிப்பதற்காகவும் நிதி ஒதுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக எமது டிஜிட்டல் அமைச்சின் ஹான்ஸ் அவர்களுக்கு JSC-யை நேரடியாகச் சந்தித்து இவற்றைத் துரிதப்படுத்துமாறு நான் பணிப்புரை விடுத்துள்ளேன். தற்போது உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குறிப்பிடத்தக்க பலன்கள் உள்ளன. தற்போது அது பரிசோதனை மட்டத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன். இது வெற்றியளிக்குமா என்பதை செயற்படுத்திப் பார்க்க வேண்டும். எனவே, இது முழுமையான ஒரு செயன்முறையின் ஒரு பகுதியாகும். இது எவ்விதத்திலும் நீதிபதிகளின் காலத்தை அதிகரிப்பது தொடர்பான பிரச்சினை அல்ல, விசாரணைச் செயன்முறை தொடக்கம் முழுமையான செயற்பாட்டின் ஒரு பகுதியாகும்.
இன்றைக்கும் மக்கள் நீதித்துறை கட்டமைப்பை நம்புகின்றனர். இந்த நீதித்துறை கட்டமைப்பை இன்றைக்கும் நறுமணமிக்க காரணங்களினால்தான் நம்புகிறார்களா? இல்லையே. நறுமணமில்லாத எவ்வளவோ விடயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் மக்கள் இந்த நீதித்துறை கட்டமைப்பு மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, நான் இந்த நீதித்துறை கட்டமைப்பு மீது நம்பிக்கை வைக்கிறேன்.
உண்மையைச் சொன்னால், இது ஒரு கட்டமைப்பு ரீதியான மாற்றமாகும். இதற்கு முன்பு செய்யப்பட்டது தனி நபர் மாற்றம், நபர்சார்ந்த மாற்றமாகும். இதை விளக்கிக் கூற முடியும். டிசம்பர் 01-க்கு முன்னரோ அதற்குப் பிறகு முடியாதா என்று சிலர் என்னிடம் கேட்பதை நான் பார்த்தேன். டிசம்பர் 01-க்குப் பிறகு முடியாது என்று கூறுவதில் எந்தவொரு கொள்கை சார்ந்த பிரச்சினையும் இல்லை. நபர்கள் குறித்த பிரச்சினை உள்ளது. எனக்கு நபர்கள் மீதான பிரச்சினை எதுவும் இல்லை, என்னைப் பொறுத்தவரை இவர்களில் பலரை எனக்குத் தெரியாது, அந்த மட்டத்தில் உள்ள பலருடன் எனக்கு எந்தவொரு நெருங்கிய தொடர்பும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். நான் இந்தப் பதவிக்கு வந்த பிறகுதான் சிலரின் பெயர்களைக் கூட அறிந்தேன். வேறு எங்குமே இதுபோன்ற சந்தர்ப்பங்களைத் தவிர நாம் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளாதவர்கள்தான். ஆனாலும், இந்த கட்டமைப்பில் ஒரு மாற்றம் தேவை என்று நான் நினைக்கிறேன்.
அந்த கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த விடயத்தைச் செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நீதித்துறைக்கு எப்பொழுதும் மிகச் சிறந்த நறுமணத்துடன் செயற்பட்ட பயணம் இல்லை. அதனால், இது நீதித்துறைக்கு பெரும் அழிவை ஏற்படுத்தும், ஒரு பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும், இதன் பிறகு நீதித்துறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை முற்றிலும் வீழ்ச்சியடையும் ஒரு நிலை உருவாகிறது என்பதுதான். ஒரு போராட்டம் என்று வரும்போது, அதன் எல்லைக்கு அப்பால் கருத்துகளை முன்வைக்க வேண்டும். அதுதான் போராட்டங்களின் இயல்பு. என்னால் அதைப் புரிந்து கொள்ளவும் முடியும்.
ஒரு போராட்டம் என்று செய்யும்போது, அந்தப் போராட்டத்தின் உண்மையான தர்க்கத்திலிருந்து, அந்தத் தர்க்கத்தை விட சற்று உயர் போராட்டத்தை அமைக்க வேண்டும். எனக்கு அது தெரியும். அப்பொழுது நாம் ஒரு பெரிய அச்சமூட்டலை உருவாக்க முடியும், இது முதல் நீதித்துறை மீது மக்களின் நம்பிக்கை பாழாகிவிடும், மக்கள் நீதித்துறை வழங்கும் ஒரு தீர்ப்பு, இந்தச் சிறப்புச் சலுகையைப் பெற்ற ஒருவர் வழங்கிய தீர்ப்பு என்பதால் அவருக்கு சில தாக்கங்கள் ஏற்படலாம், இதுபோன்ற விடயங்கள் எழுப்பப்படலாம். நான் நினைக்கிறேன், நாம் எவற்றுக்கேனும் உடன்படவில்லை என்றால், உடன்படாமையைச் சமூகமயமாக்குவதற்காகச் செய்யப்படும் போராட்டங்கள் அவை.
எந்தவொரு போராட்டத்திலும் அப்படித்தான். வாதத்திற்காக சற்று மேலே ஒவ்வொரு போராட்டமும் அமைக்கப்படுகிறது. நீங்கள் அப்படிச் செய்கிறீர்கள் என்று நான் சொல்லவில்லை, வெளியில் நடக்கும் கருத்தாடலைத்தான் நான் சொல்கிறேன். சட்டத்தரணிகள் சங்கம் அல்ல, வெளிக் கருத்தாடல்கள் வாதத்திற்கு அப்பாற்பட்டதாகத்தான் இருக்கின்றன. சில வேளைகளில் இந்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு இடப்படும் பெயர்கள், அவை அரசியலமைப்புக்குள் இருக்கின்றனவா? அவை வாதத்திற்குட்பட்டு இருக்கின்றனவா? இல்லை, அவை வாதத்திற்கு அப்பால் செல்லும் அச்சமூட்டல்களுக்குள்தான் இருக்கின்றன. எனவே, இந்தக் கொள்கையிலிருந்துதான் நாம் செயற்பட வேண்டும் என்பதுதான் எமது கருத்தாகும்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026.08.13




Comments