Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

பந்து பரிமாற்றும் அதிகாரிகள் : மத்திய வங்கி பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது - பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் ஆவேசம்


 பந்து பரிமாற்றும் அதிகாரிகள் : மத்திய வங்கி பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது - பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் ஆவேசம்


அவுஸ்திரேலியாவிற்குச்செலுத்த வேண்டிய கடன் திருப்பிச்செலுத்துதல் மற்றும் அது தொடர்பான நிதி முறைகேடுகள் குறித்து பாராளுமன்றத்தில் புதன் கிழமை (05) இடம்பெற்ற விவாதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆவேசமாக உரையாற்றினார்.


அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) இடம்பெற்ற விசாரணைகளைக்குறிப்பிட்டு தனது உரையைத்தொடங்கிய அவர், அங்குள்ள அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய போது, மத்திய வங்கியோடும் நிதி அமைச்சுடனும் தொடர்பிலிருந்த அந்த அதிகாரிகள் எவ்வித பொறுப்புமற்று மாறி மாறி பந்து பரிமாற்றம் செய்யும் செயலிலேயே ஈடுபட்டனர். தங்களின் பொறுப்பிலிருந்து நழுவப்பார்த்தனர் என சபையில் அம்பலப்படுத்தினார்.


தொடர்ந்து குறிப்பிட்ட அறிக்கையை வாசித்துக்காட்டிய அவர், 

மத்திய வங்கியானது அரசாங்கத்தின் வங்கியாளராக மட்டுமே செயற்படுவதாகக்கூறினாலும், பணமோசடி தடுப்புச்சட்ட தாக்கங்களைக்கொண்டுள்ள இப்பரிவர்த்தனைகள் மீது நிதியமைச்சு போதிய கவனஞ்செலுத்தவில்லை. அத்தகைய பரிவர்த்தனைகள் இலங்கை மத்திய வங்கியால் ஏற்கனவே அடையாளங்காணப்பட்டிருந்த போதிலும், அது குறித்த உரிய கவனஞ்செலுத்தப்படவில்லை.


பரிவர்த்தனைகளில் சந்தேகங்களும் முறைகேடுகளும் சுட்டிக்காட்டப்பட்டு ஏற்கனவே சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தது. அங்கே ஏதோ தவறு நடந்துள்ளது என்பது தெளிவாகத் தெரியப்படுத்தப்பட்டிருந்த போதிலும், அதனைத்தாங்கள் அறிந்திருந்தும் சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்ந்து அப்பணப்பரிவர்த்தனைகளை அங்கீகரித்து அனுப்பியுள்ளனர். 


அரசாங்கத்தின் மற்றும் நாட்டின் வங்கியாளராகச் செயற்பட்ட மத்திய வங்கி இத்தகைய சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்து நிதிப்புலனாய்வுப்பிரிவிடம் முன்கூட்டியே அறிக்கையிடக்கடமைப்பட்டிருந்தது. இப்பாரிய தவறுகளுக்கு மத்திய வங்கி தனது பொறுப்புகளிலிருந்து எக்காரணத்தைக்கொண்டும் தப்பியோட முடியாது.


சட்டமாஅதிபர் மத்திய வங்கிக்கு விலக்களித்த விவகாரம் விமர்சனத்திற்குரியது. நிதியறிக்கையிடல் சட்டத்தின் பிரிவு 7-ன் கீழ், எந்தவொரு நிறுவனமாவது நிதிப்பரிமாற்றம் செய்தால், இங்கு அவர்கள் அரசாங்கத்தின் சார்பாகப்பணத்தை மாற்றியுள்ளனர். அது அரசாங்கத்தின் வங்கியாளரும் இவ்விவகாரத்தில் பொறுப்புக்கூற வேண்டும். எனினும், சட்டமாஅதிபர் திணைக்களத்தின் உதவியுடன் அவர்கள் அதிலிருந்து தப்பித்துக்கொண்டுள்ளனர்.


மத்திய வங்கி மற்றும் சட்டமாஅதிபர் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள் தங்களின் சட்டபூர்வமான பொறுப்புகளிலிருந்து நழுவிக்கொள்வதையும், இத்தகைய தீவிரமான கவனக்குறைவுகள் மற்றும் பொறுப்பற்ற தன்மையினால் ஏற்கனவே ஒரு தற்கொலை நிகழ்ந்துள்ளதுடன், ஒரு மூத்த அதிகாரியின் உயிரும் இழக்கப்பட்டுள்ளது என்ற அரச நிர்வாகத்தின் படுதோல்வியைச்சுட்டிக்காட்டினார்.


(விருட்ச வேந்தன்)

Comments