Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கைவிடப்பட்ட ஒரு பொருளைப் போல், ஒருநாள் ஆகிவிடுவோம்.


 கைவிடப்பட்ட ஒரு பொருளைப் போல், ஒருநாள் ஆகிவிடுவோம். 

அந்தக் கட்டத்தில் நம் பால் தேவையுடையவர்களாக இருந்தால் மட்டுமே, மனிதர்கள் நம்மைத் திரும்பிப் பார்ப்பார்கள்.


நீங்கள் தேடப்படாமல் போனால் வருந்தாதீர்கள். தனிமையின் இருட்டுக்குள் முடங்கிக் கிடக்காதீர்கள்.

இருட்டை ஏசிக் கொண்டிருக்காமல் சிறு ஒளிச்சுடரையாவது ஏற்றுங்கள்.

வாழ்தலைக் கனதியாக்குங்கள். இன்னும் அர்த்தம் செறிந்ததாய் மாற்றுங்கள்.


தவறவிடப்பட்ட ஒரு பொருள் எப்போது தேடப்படுமோ, அப்போதுதான் அதற்கு மதிப்பு இருக்கிறது என்று அர்த்தம்.

தேடப்படாத பொருள் குப்பைக்கூடைக்குள் சென்றுவிடும்.


நீங்கள் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் செல்ல வேண்டுமா அல்லது மானிடவெளியின் ஒளி நட்சத்திரங்களாக மின்ன வேண்டுமா?


தங்கம் மண்ணோடும் நீரோடும் கலந்திருக்கும்போது வெறும் துகள்தான். வடித்தெடுக்கப்படும்போதுதான்,  அது புதுப் பொலிவையும் புதுப்பெறுமானத்தையும் பெறுகிறது.


வரலாற்றை மாற்றிய மகத்தான மனிதர்கள் எல்லாம், அவர்களின் சமகாலத்தவர்களால் புரிந்துகொள்ளப்படாதவர்கள்தான். இப்படிப்பட்டோருக்கு சொந்த ஊரில் உரிய மதிப்பு கிடைப்பதில்லை என்பதுதான் யதார்த்தம். 

அவர்களுள் பலர், சரியான புரிதலின்றி, தாம் வாழ்ந்த காலத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள்தான்.


அதனால்தான் முன்னோக்கிச் சிந்தித்தவர்கள், காலத்தையும் நிலத்தையும், தங்களது குறுகிய வட்டங்களையும் கடந்து சென்றார்கள்.


புலப்பெயர்வில் வாழ்வின் புதிய திசைகளைத் தரிசித்தவர்கள் அதிகம்.

'எல்லை கடத்தல்' ஒரு பௌதீக நடவடிக்கை (Physical Activity) மட்டுமல்ல. அது ஆன்மீக விகசிப்பு நிறைந்த மனவெளிப் பயணமும்தான்.


இந்தப் பின்புலத்தில், கூர்மதியோடும் சரியான நுண்ணுணர்வோடும் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு, பிரக்ஞைபூர்வமாக இயங்குவீர்களாயின், காலம் உங்களை மீட்டெடுக்கும். வரலாறு உங்களை மீள்கண்டுபிடிப்புச் செய்யும். 


அப்போது நீங்கள் இருக்க மாட்டீர்கள்.

உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையும் ஒரு திறந்த புத்தகம் போல முன்னுதாரணமாய், படிப்பினையாய் இருக்கும்.

உங்கள் கருத்துகளும் சிந்தனைகளும் உயிர்ப்போடு உலா வரும்.


இருக்கும்போது உங்கள் அருமை புரியாது. சிலர் மட்டுமே அதைச் சரியாக உணர்வர். நீங்கள் இல்லாதபோதுதான் உங்களின் இடைவெளி, வெற்றிடம் பலருக்குப் புலப்படும். அதை மரணத்தின் பின்னர்தான் அவர்கள் சரியாக உணர்வார்கள்.

யார் அதை முன்கூட்டியே உணர்கிறாரோ அவரின் அகவிழி திறந்திருக்கிறது என்று அர்த்தம்.


முன்னே தெரியும் காட்சிதான் இலக்கு நோக்கி நம்மை உந்தும். தொலைநோக்குதான் தெளிந்த பாதையின் வரைபடத்தை வரையும்.


அதனால்தான் வாழ்வை முன்னோக்கிப் பாருங்கள். இந்தக் காலத்தின் மனிதர்களின் கண்ணாடியால் பார்க்காதீர்கள். இனிவரும் காலத்தின் மனச் சித்திரத்தை வரையுங்கள்.


இந்த வாழ்க்கையில் உங்கள் அன்பை, ஆதரவை, அருகாமையை, அறிவை யார் அதிகம் எதிர்பார்க்கிறார்களோ அவர்களுக்கு அவற்றை அள்ளி வழங்குங்கள்.


நீங்கள் சிந்தனையின் வீச்சுகளால் நிறைந்திருப்பீர்களாயின்- செயல்முனைப்பால் வாழ்வின் பெறுமானத்தைக் கூட்டியிருப்பீர்களாயின் (Value Addition)- உங்கள் மரணத்தின் பின்னர்தான் நீங்கள் அதிகம் புரிந்துகொள்ளப்படுவீர்கள். 


அப்படியொரு வாழ்க்கையை அடைந்தவர்கள்தான் காலத்தைக் கடந்து நிற்பார்கள். துருவ நட்சத்திரமாக ஒளிர்வார்கள்.


சிராஜ் மஷ்ஹூர்

வெள்ளி காலை சிந்தனைகள்.

07.08.2026

Comments