Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

புனித மக்காவில் உள்ள இலங்கை இல்லம் : முன்னோடிகள் !


 புனித மக்காவில் உள்ள இலங்கை இல்லம் : முன்னோடிகள் ! 


எனது முன்னைய பதிவில் மக்கமா நகரில் அமைந்துள்ள இலங்கை இல்லம் எனும் அறக்கட்டளை  தொடர்பிலும் அதன் தற்போதைய அறங்காவலர் இலங்கை ஸவூதி பிரஜை ஸாதிஹான் அவர்களது வகிபாகம் மற்றும் இலங்கை தூதரகம் கொன்ஸல் காரியாலயம் ஆகியவற்றின் நடவடிக்கைகள் பற்றியும் சுருக்கமாக  எழுதியிருந்தேன், அதன் தொடராக இந்தப்பதிவில் இலங்கை இல்லத்தை ஸ்தாபித்த இலங்கை முஸ்லிம் தலைவர்கள் மற்றும் தனவந்தர்கள் பற்றி சிறியதோர் அறிமுகத்தை செய்வதன் மூலம் அவர்களுக்காகவும் அவர்களது சந்ததிகளுக்காகவும் இன்றுவரை அதனை பாதுகாத்து வருவோருக்க்காகவும் துஆ இறைஞ்சுமாறு எமது சமுதாயத்தை பணிவுடன் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.


1932 ஆம் ஆண்டு ஸவூதி அரேபியா எனும் நாடு பிரகடனம் செய்யப்பட முதல் துருக்கியயை மையமாகக் கொண்ட உத்மானிய சாம்ராஜ்யத்தின் பிரதிநிதி மக்கா கவர்னர் ஷரீஃப் மக்கா அவர்களது ஆளுகையின் கீழ் இரு புனித தளங்களும் இருந்ததமை குறிப்பிடத்தக்கது.


உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் மக்கா மதீனா பைதுல் மக்திஸ் நிர்வாகத்திற்கென காசுபணங்களை சேர்த்து கொடையாக அனுப்பும் வழமையும் இருந்தது, ஸவூதி அரேபியா ஒரு நாடாக மாறிய பெற்றொலிய கண்டுபிடிப்பு விருத்தியடையும் வரைக்கும் அந்த நடைமுறை இருந்தது.


அந்த கால கட்டத்தில் அதிகமான ஹஜ்யாத்திரிகர்கள் பல மாதங்கள் கப்பல் பயணத்தில் ஹஜ்ஜிற்கு சென்று வருவார்கள், புனித தளங்களின் பிரதான உட்கட்டமைப்புகள் பொது வசதிகள் தவிர்த்து தங்குமிட வசதிகளை அங்குள்ள அரபு வணிகர்கள் செய்து வந்தனர், அத்தோடு பல்வேற நாடுகளில் இருந்தும் வருகை தரும் தனவந்தர்களும் அங்கு தமது நாட்டு யாத்திரிகர்கள் தங்கிச் செல்ல வக்ஃப் சொத்துக்களை வாங்கி வைக்கின்ற முறையும் இருந்தது.


பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இலங்கை முஸ்லிம் தனவந்தர்களும் வர்த்தகர்களும் இலங்கையில் இருந்து புனித மக்கா மதீனா மஸ்ஜித்களின் யாத்திரிரைக்கால நிர்வாகச் செலவுகளிற்காக காசு பணம் சேர்த்து அனுப்பி வைக்கும் வழமையும் இருந்தது. 


தமது வாழ்நாள் சேமிப்புகளுடன் மக்காவிற்கு வந்து செல்லும் வசதி குறைந்த (ஏழைகள் அல்ல) இலங்கை யாத்திரிகர்கள் தங்குவதற்காக மக்காவில் ஒரு கட்டடத்தை வாங்கி வக்ஃப் செய்வதன் அவசியத்தை அன்றைய முஸ்லிம் தலைவர்கள், தனவந்தர்கள் உணர்ந்து 1964 ஆம் ஆண்டு ஒரு குழுவினர் அங்கு சென்று தற்போது ஹில்டன் ஹோட்டல் அமைந்துள்ள இடத்திற்கு பின்னால் இப்ராஹீம் கலீல் வீதியில் மிஸ்பஃலா என்ற இடத்தில் ஒரு சிறிய மூன்று மாடி கட்டத்தை வாங்கி வக்ஃப் செய்தார்கள்.


மர்ஹூம் அல்ஹாஜ் யாகூப் லெப்பை  அவர்களின் தலைமையில், இலங்கையின் மறைந்த முன்னாள் முன்னணி முஸ்லிம் பிரமுகர்களான அல்ஹாஜ் டி. பி. ஜாயா, கலாநிதி எம். சி. எம். கலீல், அல்ஹாஜ் அகமது உவைஸ் மரிக்கார் அல்ஹாஜ் மாக்கான் மாக்கார்,அல்ஹாஜ் அலித்தம்பி ஹமீத் லெப்பை, அல்ஹாஜ் அகமது சுலைமான் உவைஸ் பாவா மரிக்கார், அல்ஹாஜ் முகமது சுலைமான் உவைஸ் மரிக்கார் பாவா, அல்ஹாஜ் முகமது ஹனிபா, அல்ஹாஜ் முகமது நைனா மரிக்கார், அல்ஹாஜ் அகமது பதியுதீன், அல்ஹாஜ் அப்துல் கபூர் மற்றும் அல்ஹாஜ் சேர் றாசிக் பரீத் உள்ளிட்ட சமூகத் தலைவர்களும் கொடைவள்ளல்களும் புனித மக்கமா நகர் சென்று அந்த கட்டடத்தை வாங்கி இலங்கை இல்லமாக வக்ஃபு செய்திருந்தனர்!


இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் ஸவூதி அரேபியாவின் வக்ஃப் சட்டங்களுக்கு ஏற்ப இலங்கை இல்லம் எனும் அறக்கட்டளை சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தூதுவர் (பதவி) ஜித்தா நகரில் உள்ள கொன்ஸல் ஜெனரல் (பதவி) இலங்கை வக்ஃப் சபை பிரதிநிதி உட்பட முன்னோடி ஸ்தாபகர்களின் வாரிசுகளுடன் ஓரிரு சமூக முக்கியஸ்தர்களையும் அந்த அறக்கட்டளை உறுப்பினர்களாக நியமனம் செய்து தற்போதைய அறங்காவலர் அல்ஹாஜ் ஸாதிஹான் அவர்களது வழிகாட்டலில் அதற்கான புதிய நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப் படுகின்றன.


இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னரும் அதன் போதும் அதன் பின்னரும் எமது இருப்பை பாதுகாப்பை சமய கலாசார உரிமைகளை உறுதி செய்வதற்காக முன்னின்று உழைத்த முன்னோடி முஸ்லிம்  தலைவர்களை அல்லாஹ் தன் அளப்பரிய அருள் கொண்டு அரவணைத்துக் கொள்வானாக, உயரிய சுவனத்திலும் அஸ்ஸாபிகூன் அவ்வலூன் மினல் முகர்ரபீன்களாக அவர்களை பதியச் செய்வானாக, அவர்களது சந்ததிகள் வாழ்விலும் வாழ்வாதாரங்களிலும் பரக்கத் செய்வானாக, அவர்கள் உம்மத்திற்காக விட்டுச் சென்ற வக்ஃபுச் சொத்துக்களை, அமானிதங்களை பாதுகாத்து பரிபாலிக்கும் நல்லடியார்களுக்கும் இம்மை மறுமை ஈடேற்றங்களைத் தருவானாக!

ஆமீன்..


மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்

முன்னாள் இலங்கை கொன்ஸல் ஜெனரல் - ஜெத்தா, ஸவூதி அரேபியா

23.08.2026

Comments